- திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பது சான்றோர் வாக்கு. இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டுமானால் ஆண் பெண் இருவரின் ஜாதகங்களையும் சரியாக கணித்து பொருத்தம் பார்க்க வேண்டும். பொருத்தம் பார்ப்பதில் இரண்டு முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நட்சத்திர பொருத்தம். மற்றொன்று ஜாதக பொருத்தம். இதில் நட்சத்திர பொருத்தம் என்பது தூல பொருத்தமாகும். இது குண ஒற்றுமைக்கான பலன்களை கூறும். ஜாதகப் பொருத்தம் என்பது சூட்சும பொருத்தமாகும். இது யோக, தோஷ அமைப்புகளையும் வருங்கால முன்னேற்றங்கள், வாழ்வில் ஏற்படகூடிய சுக துக்கங்கள் பற்றிய விபரங்களையும் சுப அசுப பலன்களையும் விபரமாகத் தரவல்லது. ஆகவே திருமண பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தங்களோடு ஜாதகப் பொருத்தங்களை அவசியம் விளக்கமாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஜாதகரீதியாக கிரக பலன்கள், திசை புத்தி பலன்கள், யோக பலன்களை ஒப்பிட்டுப் பார்த்து சரியான ஜாதகங்களை இணைத்தால் நல்ல மணவாழ்க்கை அமைந்து குடும்ப சுகமும் புத்திர பாக்கியமும் உண்டாகும். ஜாதகரீதியாக கிரக பலன்கள், திசை புத்தி பலன்கள், யோக பலன்களை ஒப்பிட்டுப் பார்த்து சரியான ஜாதகங்களை இணைப்பது நன்மை தரவல்லது. நட்சத்திரப் பொருத்தங்களில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம் ஆகியன தம்பதியருக்கு குண ஒற்றுமையைத் தரவல்லது. மகேந்திரப் பொருத்தம், இராசிப் பொருத்தம், நாடிப் பொருத்தம் ஆகியன புத்திர பாக்கிய யோகத்தை தரவல்லது. மேலும், பெண் தீர்க்கப் பொருத்தம், ரஜ்ஜு எனப்படும் கயிறுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகியன ஆயுள் விருத்தியை தரவல்லது. இவைகளுக்கு ஏற்றார் போல ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம், சயன போக ஸ்தானம் ஆகியன ஒன்றுக்கு ஒன்று பொருத்தமானதாக உள்ளதா? என ஆய்வு செய்து பொருத்தம் நிர்ணயிக்க வேண்டும். அப்படி அமைத்தால் நல்ல மணவாழ்க்கை அமைந்து குடும்ப சுகமும் புத்திர பாக்கியமும் வாழ்வில் எல்லா நலமும் வளமும் உண்டாகி லாபமும் மகிழ்ச்சியும் நிலவும்.